எம்.ஜி. ஆரின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகளும் விருது வழங்கலும்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று நடைபெற்றுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்த நிகழ்வு கண்டி பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ், தலைமையில் எம்.ஜி.ஆர் தொடர்பான சிறப்பு பட்டிமன்றமும், எம்.ஜி.ஆரின் விவரண படமும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த நூற்றாண்டு விழாவின் சிறப்பு நூல் வெளியீடும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், இந்திய நடிகர்களுக்கும் அவர்கள் செய்த சேவையை பாராட்டி எம்.ஜி.ஆர் விருது வழங்கலும் இடம்பெற்றதோடு, கலந்து கொண்ட ஏனைய அதிதிகளுக்கும் எம்.ஜி.ஆர் விருது வழங்கப்பட்டது.