மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக மக்கள் முறைப்பாடு

Report Print Ashik in சமூகம்

வட, கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டு 12 வருடங்கள் ஆகியும் தங்களுக்கு வழங்கபட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என மாந்தை மேற்கு பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 53 பேர் தங்களுக்கான விவசாய காணிகளை இன்னும் வழங்கவில்லை என கோரி பல்வேறு தடவைகள் மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எனினும் அதற்கு உரிய பதில் வழங்கப்படாத நிலையில் தேவன் பிட்டி கிராம விவசாய அமைப்பின் பிரதி நிதிகள் ஊடாக மன்னார் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் இன்று மாலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டாலும் ஆறு மாத காலம் மாத்திரமே மீன் பிடியை மேற்கொள்ள முடியும்.

அதன் காரணமாக ஏனைய ஆறு மாத காலமும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்காக 1992ம் ஆண்டு மாந்தை மேற்கு பிரதேச செயளாலரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய காணிகளை பிரதேச மக்கள் கோரி இருந்தனர்.

இதன் பிரகாரம் 2006ம் ஆண்டு 53 நபர்களுக்கு பாலி ஆறு மற்றும் வெள்ளாங்குளம் அருகே அமைந்துள்ள காணிகளை வழங்க கோரி வட- கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் பெயர் விபரங்கள் அடங்கிய அனுமதி வழங்கப்பட்டது.

12 வருடங்கள் கடந்தும் இதுவரை மாந்தை பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு எந்த வித காணிகளும் வழங்கப்படவில்லை. எழுத்து பூர்வமான பதில்களும் எதுவும் வழங்கப்படவில்லை.

தற்போது தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே தங்களுக்கு வழங்க தீர்மானித்திருந்த காணிகளை விரைவாக பெற்றுத் தருமாறு கோரியும் மன்னார் மனித உரிமை ஆணைகுழுவின் உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Offers