கைவிடப்பட்டது வவுனியா இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று காலை 5.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்தின் நடத்துனர், சாரதி மற்றும் பேருந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேருந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தனியார் பேருந்தின் நடத்துனர், சாரதியினை நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனினும் தனியார் பேருந்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், வவுனியா புதிய பேருந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையின் வவுனியா, முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய சாலைகளின் ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை நேற்று ஆரம்பித்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் தலமையிலான குழு போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

விரைவில் தனியார் பேருந்தின் உரிமையாளரை கைது செய்வதாகவும் பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கோரப்பட்டது. எனினும் கைது செய்யும் வரை தாங்கள் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த தனியார் பேருந்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதன் காரணமாக தாம் பணிக்கு திரும்புவதாகவும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதாகவும் இ.போ.சவின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers