வாழ்வே போராட்டம்.. முல்லைத்தீவு மக்களின் இன்றைய நிலை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் மக்கள் ஜனநாயக ரீதியில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்துள்ள நிலையிலும் அவர்களுக்கான தீர்வு எதும் இதுவரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கேப்பாபுலவு மக்கள் பல நாட்களாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

இதேவேளை காணாமற்போனாரின் உறவினர்களின் போராட்டம் ஒருவருடங்களை கடந்த நிலையில் தொடர்கின்ற போதும் அவர்களுக்கான தீர்வும் கிடைக்கவில்லை.

பல்வேறு வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது ஜனநாயக வழி போராட்டத்தின் ஒருவடிவமாக ஆலயங்கள் தோறும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு போராட்டம் நடத்துகின்றனர். எனினும் அவர்களுக்கான தீர்வு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

மகாவலி எல் வலயம் ஊடாக முல்லைத்தீவு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி மக்கள் மாபெரும் ஜனநாயக வழிபோராட்டத்தை அண்மையில் தொடர்ந்தனர்.

தமது நிலையை உணர்ந்து, தமது கோரிக்கையை ஏற்று அரசாங்கத்திற்கு அறிவித்து நல்ல முடிவை பெற்றுத்தருமாறும் கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர்களும் கையளித்துள்ளனர்.

ஆனாலும் போராட்டம் நடத்திய மறு நாளே கருநாட்ட கேணியில் வசிக்கும் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்காக நில அளவீடு செய்ய மகாவலி அபிவிருத்தி சபை அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

அவற்றை நிறுத்துமாறும் கோரி மக்கள் ஜனநாயக வழி போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஆழ்கடலில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி நுழைந்து திட்டமிட்ட வகையில் சட்டவிரோத கடற்தொழிலை மேற்கொண்டு தமது வழ்வாதாரத்தை பாதிக்க செய்வதை தடுத்து நிறுத்த கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அவர்களுடைய போராட்டத்திற்கும் சரியான தீர்வு இது வரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்சியாக ஜனநாயவழி போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்கள், தமிழ் மக்கள் பிரதிநிதிகளை குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதில் பின்னடைவை சந்தித்துவருவாதாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும் தமது உரிமைப் போராட்டங்களிற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தமது ஜனநாயக வழிபோராட்டம் தொடரும் என்று மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.