சேனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பியவை நடித்து உருவாக்கப்பட்டவை - அமைச்சர் மகிந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in சமூகம்

படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும், சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள் நடித்து உருவாக்கப்பட்டவை எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடிப்படைவாத புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு வந்து, போர் தொடர்பான புகைப்படங்களை வழங்குவது தொடர்ந்தும் நடைபெற்று வரும் விடயம்.

போர் நடைபெற்ற காலத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி அரசியல் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது என்பது எமக்கு நன்றாக தெரியும்.

இன்றைய தொழில்நுட்படுத்துடன் பார்த்தால், காட்சிகளை உருவாக்குவது போன்ற விடயங்கள் மிகவும் எளிது. அப்போதும் பலவற்றை தயாரித்து காண்பித்தனர்.

போர் நடைபெற்ற பிரதேசத்தில் நான்கு மருத்துவர்கள் இருந்தனர். தினமும் சீ.என்.என். அல்ஜசீரா ஆகிய ஊடகங்கள் இவர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு விபரங்களை கேட்டறிந்தன.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்படுகிறது, பொதுமக்கள் இறக்கின்றனர், நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர் போன்ற விடயங்களை மருத்துவர்கள் கூறுவார்கள்.

மருத்துவர்கள் குரல்களுக்கு இடையில் நடித்த காட்சிகளையும் காட்டுவார்கள். அந்த காட்சிகளில் பொது மக்கள் ஓடுவார்கள், குண்டு வெடிக்கும்.

இறுதியில் வெளியில் வந்த மருத்துவர்கள் என்ன கூறினார்கள். இவற்றை கூறுமாறு தமக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக நான்கு மருத்துவர்களும் கூறினார்கள்.

தலையில் துப்பாக்கியை வைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் எங்களிடம் கேட்கின்றனர். அங்கு இதுதான் உண்மையில் நடந்தது.

இவை திட்டமிட்டு செய்யப்பட்டவை. அடிப்படைவாத புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூறியபடி பிரபலப்படுத்தும் தேவை சேனல் 4 தொலைக்காட்சிக்கு இருந்தது.

சேனல் 4 தொலைக்காட்சி குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம், அந்நாட்டின் ஊடக பேரவையிடம் முறைப்பாடு செய்திருந்தது.

எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்தோம், ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஒளிப்பரப்பினார்கள். அவர்கள் மாத்திரமல்ல, வேறு தரப்பினரும் ஒளிப்பரப்பினர்.

அவை தொடர்பான விடயங்களுக்கு நாங்கள் பொறுப்புக் கூற முடியாது. அவை அந்த நேரத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றைதான் உண்மையில் அவர்கள் திரையிட்டனர்.

இராணுவம் அப்படியான போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை நான் கூற விரும்புகிறேன் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.