இலங்கை வான் பரப்பை சுதந்திரமான வான் பரப்பாக மாற்ற திட்டம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கைக்கு சொந்தமான வான்பரப்பை சுதந்திரமான வான் பரப்பாக மாற்றும் சட்டமூல வரைவை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உலகில் உள்ள எந்த விமான நிறுவனமும் விமான சேவைகளுக்கான இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், புதிய மாற்றத்தின் மூலம் அதிகளவான விமானங்களை இலங்கையில் தரையிறக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் மத்தள விமான நிலையம் மட்டுமல்லாது கட்டுநாயக்க விமான நிலையமும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாறும்.

இதன் ஊடாக சுற்றுலாத் தொழிற்துறை மற்றும் முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அந்த சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஒழிக்கப்படும் என்பதுடன் இலங்கைக்கு இருக்கும் விமான நிறுவனத்தின் உரிமையும் இல்லாமல் போகும் என ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.