கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவை உத்தரவு

Report Print Kamel Kamel in சமூகம்

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவை உத்தரவிட தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாவினால் அண்மையில் உயர்த்தியிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விலை ஏற்றத்தை ரத்து செய்ய உத்தரவிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபா என்ற அடிப்படையில் எதேச்சதிகாரமாக உயர்த்துவதற்கு பிரிமா நிறுவனத்திற்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபை சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து சில அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நாட்டை ஆட்சி செய்வது அரசாங்கமா அல்லது சங்கங்களா என அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறுவனங்கள் தாங்கள் நினைத்தவாறு விலைகளை அதிகரித்தால் அதனை தடுப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.