ராஜீவ் காந்தி கொலை வழக்கு! ஏழு தமிழர்களின் விடுதலையில் சிக்கல்

Report Print Murali Murali in சமூகம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21ம் திகதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் சேர்ந்து 14 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் தனு தவிர மற்றவர்கள் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்களது குடும்பத்தினர் சார்பிலும், வேறு சில அமைப்புகள் சார்பிலும் 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியது.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்து ஆளுநர் மாளிகை சார்பில் கடந்த சனிக் கிழமை அறிக்கை வெளியானது.

அதில், ‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் 7 பேர் விடு தலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவெடுப்பது சற்று சிக்கலான விஷயம்.

இதில், சட்டப்பிரச்சினை, நிர்வாக மற்றும் அரசியலமைப்பு சட்டரீதியான பிரச்சினைகள் அடங்கியிருப்பதால் ஆளுநர் தீர ஆலோசித்து தக்க முடிவெடுப்பார் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

2014ம் ஆண்டு 7 பேர் விடு தலை குறித்து எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து, காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம், ராம.சுகந்தன் உள்ளிட் டோர் சார்பில் அப்போது தொடரப் பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ள விவகாரம் அப்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சம்தானி பேகம், 1991ம் ஆண்டு தென்சென்னை மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர். ராஜீவ் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளச் சென்றபோது குண்டுவெடிப்பில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகன் அப்பாஸ் மனுதாரர்களில் ஒருவர்.

ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்பதால், தற்போதுள்ள நிலை மற்றும் தமிழக அரசின் புதிய பரிந்துரைகளை சேர்த்து 3 வாரங்களுக்குள் புதிய மனு தாக்கல் செய்யும்படி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்த விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 7 பேர் விடுதலை வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை சேர்ந்துள்ளது.