நாலக சில்வாவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரிகளும் முறைப்பாடு?

Report Print Aasim in சமூகம்

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரிகள் சிலரும் முறைப்பாடுகள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோரை கிழக்கு மாகாணத்தில் வைத்து படுகொலை செய்வது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல்குமார என்பவருடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொலைபேசியில் உரையாடியதாக பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உரையாடலின் போது சம்பவத்துக்கு பின்தள வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகளை கடமையிலிருந்து தடுத்தல் மற்றும் அப்புறப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதால் பொலிஸ் அதிகாரிகளின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக நாலக சில்வாவுக்கு எதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ள பொலிஸ் உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் தீவிர விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்