பெண்ணொருவரின் கையை உடைத்து தங்க ஆபரணங்களை அபகரித்துச் சென்ற மர்ம நபர்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரின் கையை உடைத்து தங்க ஆபரணங்களை திருடர்கள் திருடிச் சென்றுள்னர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, உவர்மலை, கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த 68 வயது உடைய பெட்டிசியா ராசல் என்ற வயோதிப பெண்ணுக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முகத்தை மூடிக்கொண்டு தங்க ஆபரணத்தை கழற்ற முற்பட்ட வேளை கழற்ற விடாமல் தடுத்த தாயாரின் கையை உடைத்து தங்க ஆபரணத்தை திருடிச் சென்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தங்கம் திருடப்பட்டமை தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் திருகோணமலை நகர் பகுதிகளில் அதிக அளவில் நகை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சிவில் உடைகளில் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கு இடமான இடங்களில் யாராவது நடமாடினால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து தகவல்களை வழங்குமாறு திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers