தியாகி திலீபன் தூபியில் நினைவேந்தலை தடுக்க யாழ். நீதிமன்றில் மனு தாக்கல்!

Report Print Rakesh in சமூகம்

தியாக தீபம் திலீபனின் தூபி அமைந்துள்ள பிரதேசத்தில் எதிர்வரும் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அவரை நினைவுகூரும் விதமாக நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யும் விதத்தில் உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தையொட்டி யாழ். மாநகர ஆணையாளரை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ். நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலையில் யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரனின், அலுவலக அறையில் பிரசன்னமாகி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஓர் உறுப்பினர் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தமையை நினைவுகூர்வதற்கு நல்லூரில் அவரது நினைவுத் தூபிப் பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தத் தூபி இருந்த இடத்தைச் சுற்றி கம்பி வேலிஅடிக்கப்பட்டுள்ளது. கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதன் கீழ் படங்கள் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டுள்ளன.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளையும், ஏனையவற்றையும் அகற்றுவதற்கு நீதிமன்றம் கட்டளை வழங்க வேண்டும்.

இந்தச் செயற்பாட்டு வேலைகளை மேற்கொள்ளும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு இது தொடர்பான தடை உத்தரவை வழங்க வேண்டும்.

- இவ்வாறு பொலிஸார் தமது மனுவில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிவான், யாழ். மாநகர சபை ஆணையாளரை நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகக் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Latest Offers