தலவாக்கலை ஸ்தம்பிதம்! தமிழ்த் தலைவர் மக்களுடன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் படி கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், எஸ்.சிறீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி, கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது.

நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வகையில், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சென்றதை இதன்போது காணக்கூடியதாக இருந்தது.

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு தலவாக்கலை நகரவாசிகள் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஆதரவினை வழங்கியுள்ளனர்.

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் வடக்கின் தமிழ்த் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மலையக மக்களுடன் போராட்டத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers