கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

சிவன் முன்பள்ளிக்கென இந்த நவீன வசதிகளைக்கொண்ட மொடன் பாடசாலையாக இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த பாடசாலையினை அமைப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு 15மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவன் முன்பள்ளி பணிப்பாளர் பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்ற, வடமாகாண அபிவிருத்தி, இந்துமதவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கே.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாடசாலைகளுக்கும் மத தலங்களுக்கும் இடையில் இந்த நாட்டின் கல்வி வரலாற்றில் நெருங்கிய தொடர்பு இருந்ததை நாங்கள் காணமுடியும். இந்த நாட்டில் குடியேற்றவாதம் செய்தவர்கள் கூட தமது மதத்தினை பரப்புவதற்கு கல்வியை பயன்படுத்தினர். மதத்தின் ஊடாக கல்வி பரப்பப்பட்டது.

தேவாலயம், வித்தியாலயம், காரியாலயம் ஆகிய மூன்று ஆலயங்களும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இடங்கள். இந்த மூன்றுக்கும் இடையில் ஒருமித்த நல்லிணக்கம் காணப்படும் போதுதான் அந்த பிரதேசத்தில் ஒரு செழிப்பான நிலை உருவாகும்.

ஆலயங்கள் சமூகத்திற்கு உதவிசெய்யும் நிறுவனமாகவும் சமூகம் ஆலயத்திற்கு உதவும் நிறுவனங்களாகவும் காணப்படவேண்டும். இதேபோன்று சமூகம் பாடசாலைகளுக்கு உதவவேண்டும், பாடசாலை சமூகத்திற்கு உதவவேண்டும். பாடசாலை என்பது ஒரு சமூக பரிவர்த்தன நிலையமாகவும் காணப்படுகின்றது.

பாடசாலைக்குரிய வளங்கள் சமூகத்திற்காக திறந்துவிடப்பட வேண்டும், சமூகத்தில் இருக்கும் வழங்கள் பாடசாலைக்காக திறந்துவிடப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே இந்த பாடசாலைகள் செயற்படவேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்களை பொருத்தவரையில் எமது அனைத்து தேவைகளும் கல்வியாகவே இருக்கவேண்டும். எமதுபிள்ளைகளுக்கு கல்வியை வழங்கவேண்டியது எமது கடமை என்பதுக்கு எப்பால் எமது தலையாய கடமையாகும்.

ஐந்து வயதை பூர்த்திசெய்யும் பிள்ளை முறையான பாடசாலையில் தரம் ஒன்று கல்வியை கற்கவேண்டும். அதற்கு முன்னர் முன்பள்ளியில் கல்வியை பெறவேண்டும். அந்த பிள்ளை பாடசாலைக்கு சென்று கல்வியை கற்பதற்கான களத்தினையே இந்த முன்பள்ளிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இந்த கல்வியை வளங்கும் போது கல்விதுறை சார்ந்தவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவு அவசியமாகும்.

01 தொடக்கம் 05 வரையான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பக்கல்வி செயற்பாடுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் தரம் 01யும் 02யும் உள்ளடக்கியது முதன்மை நிலை 01 என சொல்லப்படுகின்றது.

தரம் 03யும் 04யும் கொண்டது முதன்மை நிலை 02 என சொல்லப்படுகின்றது. தரம் 05 முதன்மை நிலை 03 என சொல்லப்படுகின்றது. தில் தரம் 01யும் 02யும் உள்ளடக்கியது முதன்மை நிலை 01இல் உள்ள பிள்ளைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடக்கூடாது என கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் மிக இறுக்கமாக பணிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள பிள்ளைகளை மதிப்பீட்டு பரீட்சை வைத்துதர மதீப்பீடு செய்யக்கூடாது என கூறப்படுகின்றது.ஆனால் சில தேசிய பாடசாலைகள் பரீட்சைகளை வைத்து மதீப்பீடுகளை செய்யும் நிலை காணப்படுகின்றது.இது சுற்று நிரூபத்தினை மீறும் செயற்பாடாகும்.

சில பாடசாலைகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக பெற்ற மாணவர்களின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை வைத்துள்ளனர். இது சட்ட விரோதமன நடவடிக்கையாகும்.

ஒரு சில நோக்கங்களுக்காகவே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுகின்றது. இரண்டு வினாப்பத்திரங்களிலும் 35புள்ளிகளுக்கு மேல் எடுத்து 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்கள் சித்தியடைந்த மாணவர்கள் என்று சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

இந்த நாட்டில் 98 வீதமான பிள்ளைகளே தரம் ஒன்றுக்காக முறையான பாடசாலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு வீதமான பிள்ளைகள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அனுமதிக்கப்படும் பிள்ளைகளில் பலர் தரம் ஐந்தை பூர்த்திசெய்யுமுன்பாக பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகளில் இருந்து இடையில் விலகுகின்றனர். கல்வியின் மூலமே தமிழ் சமூகத்தினை தலைநிமிர்ந்து வாழச்செய்யமுடியும்.

கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் பெருமளவில் குறைந்துகொண்டுவருகின்றது. வருடாந்தம் ஐந்தாயிரம் என்ற கணக்கில் குறைந்துவருகின்றது. ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம் மாணவர்களின் தொகையினை விட தமிழ் மாணவர்களின் தொகை குறைந்துவருகின்றது.

ஐந்து வருடங்களின் பின்னர் சிறிய தொகையில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயமும் இருந்துவருகின்றது. இதற்கு வகைசொல்ல வேண்டியவர்கள் யதார்த்தவாதிகளாகும்.

தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வினை சமூகத்திற்கு ஏற்படுத்தவேண்டும்.

Latest Offers