ஆலய நிர்வாகத்திற்கெதிராக சந்தானத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய நிர்வாகத்திற்கெதிராக இன்று காலை ஆலய சந்தானத்தினர் திரண்டுவந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினரின் நிருவாகச்சீர்கேடு ஊழல் நிதிமோசடி சர்வாதிகாரப்போக்கு கூட்டத்திற்கு பெண்களை வரவேண்டாமென்று அறிவித்தமை கணக்கறிக்கை காட்டாமை கணக்காய்வுக்கு இடமளிக்காமை பிரதேசசெயலரின் நீதியான செயற்பாட்டிற்கு இடமளிக்காமை தான்தோன்றித்தனமான போக்கு என்பவற்றை சுட்டிக்காட்டி பல சுலோகங்களுடன் சேனாதிராச சந்தானத்தின் ஆண்பெண் இருபாலாரும் இந்த சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு வெளியே பிரதானவீதியோரத்தில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பலநூற்றாண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இத்தாய் ஆலயத்தின் நிர்வாகத்திற்கெதிராக இவ்வாறு பகிரங்கமாக அதே சந்தானத்தவர் பதாகைகள்தூக்கி பல குற்றச்சாட்டுக்களைச்சுமத்தி ஆர்ப்பாட்டத்திலீடுபட்டது இதுவே முதற் தடவையாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 'எங்கே எங்கள் சந்தானப் பணம்? ஊழல் நிருவாகமே உடனடியாக வெளியேறு! சந்தானத்தைப்பிரிக்காதே! பெயின்ற் பண்ண 16லட்சமா? பிறஸ் வாங்க 5லட்சமா? உள்ளக கணக்காய்வை தடைசெய்தது ஏன்? ஆலய சேமிப்புக்கணக்கிலும் கையாடலா? தாயின் கோயிலில் தாய்மார்க்குத் தடையா? ஆளுக்கொரு சட்டமா? அரசஅதிபரே ஆலய சர்வாதிகாரத்தை அடக்கு! பிரதேசசெயலரே உங்களுக்குஎமது பூரணஆதரவு! 'இவ்வாறு பல சுலோகங்களடங்கிய பதாதைகளை அவர்கள் பிடித்திருந்தனர்.*

ஆலயசந்தானத்தவர் சார்பில் படவரைஞர் சா.கனகசபேசன் பிரதமபொறியியலாளர் ப.இராஜமோகன் ஓய்வநிலை அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை நிலஅளவை அத்தியட்சகர் க.தட்சணாமூர்த்தி தொழினுட்ப உத்தியோகத்தர் மு.இரவீந்திரன் சிறைச்சாலை உத்தியோகத்தர் க.ஜெயகணேஸ் ஆசிரியை திருமதி சுதர்சினி பத்மநாதன் உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அவர்களது கருத்துக்களின்படி தெரியவருவதாவது,

ஆலயத்தில் நிலவும் நிர்வாகச்சீர்கேடு நிதிஊழல் என்பவற்றை சுட்டிக்காட்டி ஆலய சந்தானத்தினர் சிலர் காரைதீவு பிரதேசசெயலாளருக்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

அதன்படி அவர் 3 தர்மகர்தாக்களுக்கும் இது தொடர்பாக அறிவித்தார். வைகாசிப்பொங்கல் நடைபெற்று 21 நாட்களுள் தாம் பொதுச்சபைக்கூட்டத்தைக் கூட்டுவதாக தர்மகர்த்தாக்கள் பிரதேசசெயலருக்கு பதிலளித்திருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கூட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி மீண்டும் சந்தானத்தினர் பிரதேசசெயலருக்கு மனுச்செய்தனர். அவர் இருசாராரையும் அழைத்து சமரசமாகத் தீர்த்துவைக்கும்நோக்கில் எதிர்வரும் 13ஆம் திகதி பிரதேசசெயலகத்தில் சமரசக்கூட்டமொன்றை நடாத்தவிருப்தாக இருசாராருக்கும் அறிவித்தல் கொடுத்தார்.

எனினும் ஆலய நிருவாகம் அதற்குமாறாக இன்று பொதுச்சபைக் கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக ஊர்பூராக ஒலிபெருக்கிவாயிலாக வெள்ளியன்று இரவு அறிவித்தல் செய்தனர்.

இதனையறிந்து பிரதேச செயலகத்தால் சனியன்று இரவு 7மணியளவில் தனக்குரிய அதிகாரத்தை தெளிவுபடுத்தி இன்றைய கூட்டம்செல்லுபடியற்றது. எனவே 13ஆம் திகதிக்கூட்டத்திற்கு வருமாறு இருசாராருக்கும் ஊர்பூராக ஒலிபரப்புச்செய்யப்பட்டது.

இரு மணிநேரத்துள் மீண்டும் ஆலயநிருவாகம் தீர்மானிக்கப்பட்ட பொதுச்சபைக்கூட்டம் கட்டாயம் திட்டமிட்டபடி நடைபெறும். அனைத்து சந்தானத்தவரையும் கலந்துகொள்ளும்படி பொதுவான அறிவித்தலை ஊர்பூராக அறிவித்திருந்தது.

இவ்வாறான அறிவித்தல்கள் மூலம் சந்தானத்தவர் குழப்பமடைந்தனர்.

பிரதேசசெயலாளரின் செயற்பாட்டிற்கு மதிப்பளிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தானத்தவர் இன்று காலை ஆலயத்திற்கு வெளியில் வீதியோரத்தில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை நடாத்தினர்.

அதேவேளை ஆலயத்தினுள் நிருவாகசபையினர் சுமார் 30பேரடங்கிய குழுவினருடன் பொதுச்சபைக்கூட்டத்தை நடாத்தினர். வெளியில் ஆர்ப்பாட்டம் உள்ளே கூட்டம். இந்த நிலையில் இரண்டும் இன்று பகல் 11மணியளவில் நிறைவுக்கு வந்துள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில்,

உடனடியாக 5வருட கணக்கறிக்கையை பகிரங்கமாக சந்தானத்துக்கூட்டத்தில் காண்பிக்கவேண்டும். ஊழலுக்கு பேர் போன தற்போதைய நிருவாக சபையைக் கலைத்துவிட்டு புதிய நிருவாகசபை தெரியவேண்டும்.

பெண்களும் நிருவாகசபையில் அங்கம்வகிக்கவேண்டும். அராஜக சர்வாதிகாரப்போக்கை நிறுத்தவேண்டும். கணக்காய்வுக்கு கணக்கறிக்கை உட்படுத்தப்படவேண்டும். திருத்தப்பட்ட யாப்பை பகிரங்கமாக வெளியிடவேண்டும்.

பிரதேசசெயலரின் நல்ல செயறபாட்டிற்கு பூரணஆதவளிப்போம். நீதிமன்றிற்கு ஆலயத்தைக்கொண்டு செல்ல நாம் ஒருபோதும் விரும்பவில்லை. ஆலயப்பிச்சினை ஆலயத்திற்குள்தான் தீர்க்கப்படவேண்டும். என்று குறிப்பிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஊர்ப்பொதுமக்கள் வேடிக்கை பார்த்திருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது.

Latest Offers