28 வருடங்களுக்குப் பின் விடுதலையான கணவர்! மனதை நெகிழ வைக்கும் இலங்கை அகதியின் காதல் கதை

Report Print Shalini in சமூகம்

இந்தியா - திருப்பூர் மாவட்டத்தில் 28 வருடங்களுக்குப் பின் வெளியில் வந்த தன் கணவரை, தள்ளாடும் வயதிலும் மிகவும் அன்புடனும் காதலுடனும் வரவேற்ற இலங்கை அகதி குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கணவன் மனைவி என இருவரும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இலங்கை அகதியான பக்கா விஜயா 2013ஆம் ஆண்டு வெளியில் வந்தார்.

இந்த நிலையில் தனது கணவர் 28 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் விடுதலையான நிலையில் இருவர் தொடர்பாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இது குறித்து தெரியவருவதாவது,

பக்கா விஜயா ஒரு இலங்கை அகதி. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகம் சென்று ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்துள்ளார்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி பக்கா விஜயாவை காதலித்துள்ளார்.

பின்னர் பல தடைகளைத் தாண்டி இருவரும் கரம் பிடித்து 7 ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் உறங்கிக்கொண்டிருக்க பக்கா விஜயாவிடம் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதில் தனது காதல் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்து, தவறாக நடந்த நபரை சுப்பிரமணி தாக்க அவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் விஜயாவையும், சுப்ரமணியையும் பொலிஸார் கைது செய்த போது, இருவரும் பிரிந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருவருமே இந்த கொலைக்கு காரணம் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

25 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினியின் நட்பு விஜயாவுக்கு கிடைத்துள்ளது.

நளினியின் வழக்கறிஞரின் உதவியுடன் விஜயா 2013ஆம் ஆண்டு விடுதலையானார்.

விடுதலையான நாள் முதல் கணவரின் வருகைக்காக முதியோர் இல்லத்தில் காத்திருந்தாள் இலங்கை அகதியான விஜயா.

இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கண்கள் சுருங்க தள்ளாடிய படி சிறையிலிருந்து வெளியில் வந்தார் சுப்பிரமணி.

வெளியேறிய அடுத்த நொடியே ஓடோடி வந்து 28 வருடங்களுக்குப் பின் “மாமா” என தனது கணவரை கூப்பிட்டு கண்ணீர் விட்டுள்ளார். கண்கலங்கி தன் காதலை வெளிப்படுத்தினார் விஜயா.

இதன்போது 28 வருடங்களுக்குப் பிறகு மனைவியின் கரம் பிடித்த சுப்பிரமணி "சாப்டியா" என முதல் வார்த்தை கேட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Latest Offers