யாழில் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பதுடன், ஏனைய சகல போராளிகளுக்கும் சேர்த்து பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைய தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெறவிருந்த நிலையில் அன்றைய தினம் அங்கு கூடிய சிலர், விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் தவிர ஏனைய இயக்க போராளிகளின் நினைவாக நினைவு தூபி அமைக்க கூடாது என ஆப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் குறித்த நினைவு தூபி அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை நீதிவான் தள்ளுபடி செய்தார்.

Latest Offers