நீதிமன்ற கூட்டில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியல் நீடிக்கப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற கூட்டிலிருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய போது மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை நீதிமன்ற கூண்டில் மற்றுமொரு கைதியை வெளியில் எடுக்க முயற்சித்த போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளி விட்டு தப்பியோடியதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு தப்பி ஓட முயற்சித்த சந்தேகநபர் திருகோணமலை, மரத்தடி பகுதியை சேர்ந்த மறக்கலே மான்னகே ஐகத்குமார நஹத் சிரோன் (22 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நீதிமன்ற பொலிஸார் தப்பியோடிய நபரை நீதிமன்ற வாசலில் வைத்து பிடித்து மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து தப்பியோட முற்பட்ட சந்தேக நபருக்கு மீண்டும் நீதிமன்ற பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிற்காக நீதவான் முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதனைக் கருத்திற் கொண்ட நீதவான் 1500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட சந்தேக நபருக்கு ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.

இதனை அடுத்து சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்

Latest Offers