மன்னாரில் கடும் மழையிலும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன!

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் தொடர்சியாக மழை பெய்து வருகின்ற நிலையிலும் திட்டமிட்ட வகையில் மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம்பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது மன்னார் நீதவான் த.சரவண ராஜா முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராசபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களாக மன்னாரில் பெய்து வரும் பலத்த மழையினால் மனித புதை குழியானது மழை நீரால் நிரம்புகின்ற போதும், தேங்கி நிற்கின்ற மழை நீர் இயந்திரத்தின் துணையுடன் வெளியேற்றுவதுடன் அகழ்வு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்சியாக மழை பெய்யும் பட்சத்தில் குறித்த அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதுடன் அடையாளப்படுத்தப்பட்ட மேலதிக மனித எச்சங்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் 154 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 151 மனித எலும்புக்கூடுகள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 82வது தடவையாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.

Latest Offers