பொலிஸாரை கண்டித்து தீ குளிக்க முற்பட்ட இலங்கை அகதியால் பரபரப்பு

Report Print Murali Murali in சமூகம்

தண்டப்பணம் விதித்த பொலிஸாரை கண்டித்து தீ குளிக்க முற்பட்ட இலங்கை அகதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பெரம்பலூர் நகரில் போக்குவரத்து பொலிஸார் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது குறித்த இலங்கை அகதி தலைக் கவசம் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தையே வைத்திருந்தார்.

இதனையடுத்து, தலைக் கவசம் அணிந்து வராத இலங்கை அகதிக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர். எனினும், தனக்கு அபராதம் விதித்த பொலிஸாரை கண்டித்து குறித்த இலங்கை அகதி தீ குளிக்க முற்பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து காப்பாற்றப்பட்ட இலங்கை அகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி அகதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.