ஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி! சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

அண்மையில் வெளியாகியிருந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் தன் பால் ஈர்த்திருந்தவர் முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி.

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தனது கையினை இழந்த இவர் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன், தனது பாடசாலைக்கும் தன்னுடைய சமூகத்திற்கும் பெறுமை சேர்த்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மாணவியின் பின்னணியில் இருக்கும் துயரங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகினியை விட அதிகளவிலான புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகள் இருப்பினும், முள்ளிவாய்க்கால் துயரத்தின் சாட்சியாகவும், சாதனை சிறுமியாகவும் இருப்பதே ராகினி பேசுபொருளாக மாறியுள்ளமைக்கு காரணம்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் தனது கை ஒன்றை இழந்தவர் சிறுமி ராகினி.

அது மாத்திரமல்ல, அவளின் தாயாரும் குறித்த தாக்குதலில் உயிரிழந்ததுடன், ராகினியின் தந்தையும் படுகாயமடைந்துள்ளார்.

தமிழினம் மாத்திரமல்ல, மனசாட்சி உள்ள எவராலும் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் காட்சிகளில் ஒன்றுதான் இறந்த தாய்மார்களில் குழந்தைகள் பால் குடித்துக் கொண்டிருந்தமை.

இந்நிலையில், பிறந்து எட்டே மாதங்கள் ஆன ராகினி அந்த இறுதி யுத்தத்தில் தனது தாயார் கொல்லப்பட்டு இறந்துபோனதை அறியாது தாயில் பால் குடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகினியை அவரது அப்பம்மாதான் தற்போது பாதுகாவலாக வளர்த்து வருகிறார். பிரத்தியேக வகுப்புக்கள் எதற்கும் செல்லாமல், பாடசாலைக் கல்வியுடன் தான் இந்தப் பெறுபேற்றை பெற்றிருக்கிறாள் சாதனை சிறுமி ராகினி.