தனியார் துறையில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்

Report Print Kumar in சமூகம்

இளைஞர்கள் அரச தொழிலை விடுத்து தனியார் துறையின் பக்கம் சார்ந்து போட்டித்தன்மையான நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தனியார் துறையில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு, கலைஞர்கள் கௌரவம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களின் அறிமுகம் ஆகியன கொண்ட கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு, யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, றுகுணு, கொழும்பு, களனி, மொறட்டுவ மற்றும் ஊவாவெல்லச ஆகிய பல்கலைக் கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணமும் பாரட்டு விருதும் வழங்கப்பட்டன.

2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தினர்களுக்கான அறிமுகமும் மற்றும் கௌரவமும் இதன்போது வழங்கப்பட்டது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் இதன்போது விஸ்வகர்ம சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய மாநகரசபை முதல்வர்,

எமது சமூகம் கல்வியில் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கல்வித் துறையை தெரிவு செய்து இனமதம் பாராது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து சமூக மாணவர்களையும் தெரிவு செய்து இங்கு கௌரவித்தது பாராட்டத்தக்க விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான பொறுப்பு எமது சமூகத்திற்கு உள்ளது. அந்த வகையில் விஸ்வகர்ம சம்மேளனம் என்பது ஒரு விருட்சமாகும். விஸ்வகர்ம சம்மேளனம் இன்னும் பல சேவைகளை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக போராட்ட காலத்தில் தலைமைத்துவத்தை இழந்த குடும்பங்கள் தங்களது குழந்தைகளை கல்வி கற்கச்செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 27000ற்கு மேற்பட்ட விதவைகள் இங்கே இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் உதவிகளை செய்து அவர்களின் கல்வித்தேவையை நிறைவேற்றும்போது கல்வியில் கடைசி நிலையிலிருக்கும் எமது மாகாணம் முன்னுக்கு வருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற சில மாணவர்களின் குடும்பங்களில் பேததிய மாத வருமானம் இல்லாத காரணத்தினால் அவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தவேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

இவ்வாறான மாணவர்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வியை நாங்கள் ஊக்குவிக்க முடியும். ஒருசில நிறுவனங்கள் இவ்வாறான உதவிகளை செய்துவருகின்றன.

இது எமது சமூகத்திற்கான ஒரு முதலீடாகும். இதன் மூலம் பல துறைசார் நிபுணர்களை நாங்கள் பெற முடியும்.

பல்கலைக்கழக கல்வியானது தொழில் தகைமையை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாகும். உங்கள் தொழில்சார் நிபுணத்துவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் அரச தொழிலை எதிர்பார்த்து காலத்தை வீணடிக்க வேண்டிய நிலையேற்படும். தொழில் சந்தையில் எந்தத் துறைக்கு அதிக கேள்வி இருக்கின்றதோ அந்தத் துறைசார் நிபுணத்துவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமே நீங்கள் சிறந்ததொரு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்.

அரசாங்கத்தினால் வழங்கப்டுகின்ற தொழில் வீதம் 14ஆகும். 82சதவீதமானவை தனியாரினால் வழங்கப்படுகின்றன. எமது இளைஞர்கள் அரச தொழிலை விடுத்து தனியார் துறையின் பக்கம் சார்ந்து போட்டித்தன்மையான நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தனியார் துறையில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

மாநகர சபையானது கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக விஷேட குழுவொன்றை உருவாக்கியுள்ளது. இங்கே அழிந்து செல்கின்ற கலைகளை வளர்த்து அடுத்த சந்ததிக்கு அதனை எடுத்துச் செல்வதே அதன் நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எங்களது கலை கலாசாரக் குழுவானது இயங்குகின்றது. இங்கே பாராட்டி கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை எங்களால் மாதாந்தம் நடத்தப்படுகின்ற பௌர்ணமி விழாவில் அரங்கேற்ற முடியும்.

அது எங்களுடைய சமூகத்திற்கு ஒரு விருந்தாக அமையலாம். அதன் மூலம் உங்களுடைய கலைகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். அழிந்து போகின்ற கலைகளை வளர்ப்பதில் மாநகர சபையானது தொடர்ந்து உங்களுடன் பயணிக்கும்.

அரசியலானது இத்தனை காலமும் தீண்டத்தகாத துறையாக இருந்தது. தற்போது ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய சேவை நேர்மையான, நியாயமான, மக்கள் தேவை கருதியதான, கட்சி சாராத சேவையாக இருக்கும் பட்சத்தில அரசியலை நாங்கள் ஒரு சிறந்த துறையாக மாற்ற முடியும். அந்த செயற்பாட்டில் நீங்கள் அனைவரும் பங்ககொள்ள வேண்டும். உங்களது செயற்பாடு அதனைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ், மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியான் தேவாலய பிரதம குரு அருட்தந்தை தி.லோரன்ஸ், கோட்டைமுனை யூசூபியா பள்ளி வாசல் பிரதம இமாம் ஏ.ஜே.எம். இலியாஸ் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோரும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி எஸ்.அன்புதாசன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்..சண்முகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக இலங்கை (கொழும்பு) விஸ்வகர்ம சங்கத் தலைவர் எஸ். செல்வரட்ணம், மட்டக்களப்பு, கொழும்பு சொர்ணம் குழுமங்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் எம். விஸ்வநாதன், பண்டாரவளை விஸ்வகர்ம நல உரிமைச் சங்கத் தலைவர் ஆ.வரதராஜஆகியோரும் கலந்து சிறப்பித்தினர்.

Latest Offers