பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மகஜர் அனுப்பி வைப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி 588 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மகஜர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எமது பூர்வீக வாழ்விடங்கள் எமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதும் எமது வாழ்விடத்தை நாங்களே போராடி பெற்றெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எமது வாழ்விடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு மாற்றுக்காணியில் குடியமர்த்தப்பட்டிருந்தோம், அங்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லை எமது பூர்வீக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

எமது பூர்வீக வாழ்விடம் எங்களுக்கு வேண்டும். நாங்கள் பூர்வீகமாக பிறந்து வளர்ந்த மண்ணில் சென்று நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இதனை பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் எந்த பலனும் கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி எமது பூர்வீக நிலத்தை கேட்டு வீதியில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

போராட்டம் ஆரம்பித்து 303வது நாளில் ஒரு தொகுதி காணியை விடுவித்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் கேப்பாப்புலவு மக்களாகிய நாங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

2018ம் ஆண்டுக்கும் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என அறிக்கையிடப்பட்ட நல்லாட்சியினால் நாங்கள் வாழ்ந்த நிலத்தை கேட்டு போராடுகின்ற போதும் எமக்குதீர்வு கிடைக்கவில்லை.

இவ்வாறு 104 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், பாடசாலை, முன்பள்ளி, பொது மைதானம் உள்ளடங்கிய அனைத்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் மழை, வெயில், இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் வீதியில் போராடும் தமக்கான பூர்வீக இடத்தில் வாழும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers