நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்! சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்பவர் தலைமறைவாக இருக்க உதவியதாக கூறப்படும் முகவர் நிலையம் ஒன்றின் முகாமையாளரான லக்சிறி அமரசிங்க என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கைது செய்துள்ளது.

நேவி சம்பத் மலேசியாவுக்கு தப்பி செல்ல இந்த நபரே உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்தே இந்த நபரை தாம் கைது செய்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ள அதேவேளை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நேவி சம்பத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜானகி ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிறை அதிகாரிகளால் நேவி சம்பத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.