திணறும் மலையக தொழிலாளர்கள்! உடன்பாடு காண்பதில் இழுத்தடிக்கும் தலைவர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக, முதலாளிமார் சம்மேளனத்துடன் இணைந்து தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியை சந்தித்துள்ளது.

இது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் 15ஆம் திகதியோடு முடிவடையவுள்ள நிலையில், ஒப்பந்தம் புதுபிக்கப்படவுள்ளது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளும் ஊடகங்களுக்கு முன்னுக்குப் பின் முரணான கருத்து​களைத் தெரிவித்திருந்தமையை அவதானித்ததாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகங்களுக்குப் பொய்யுரைப்பதாகவும், முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வழமையான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைப் போன்று, மூடிய கதவுகளுக்குப் பின்னால், நேற்று மாலை மூன்று மணியளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அக்கட்சியின் உபதலைவர் மாரிமுத்து, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வடிவேல் சுரேஷ் மற்றும் கூட்டுக் கமிட்டியின் சார்பில் இராமநாதனும் கலந்து கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்து, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டு ஒப்பந்தப் ​பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட கோரிக்கையில் தமக்கு உடன்பாடில்லை என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலதிகக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ‌ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும், பேச்சுவார்த்தைகளில் இணக்கமில்லை என்றால், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி, பாதீட்டில் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அடிப்படைச் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு ஆகியவற்றைச் சேர்த்து, 15 சதவீதம் அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பையே கோரியிருந்தீர்கள். தற்போதும், அதே ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பையே கோரியிருக்கிறீர்கள் என ஊடகவிலயாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த தொண்டமான் கடந்த முறை மேலதிகக் கொடுப்பனவுகள், அடிப்படைச் சம்பளத்துடனேயே 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரியிருந்தாகவும், ஆனால் இம்முறை அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதையே கோரிக்கையாக முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பேச்சுவார்த்தைகள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை, முதலாளிமார் சம்மேளனமே வழங்க வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்,

ஆயிரம் ரூபாய் அல்லது 1,200 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பையே கோரியிருப்பதாகவும், ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படா விட்டால், இம்முறை கூட்டொப்பந்தத்தில் 3 தொழிற்சங்கங்களும் கையெழுத்திட போவதில்லை எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதீட்டினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க, தம்மோடு அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்குப் பாதீட்டில் எவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுகின்றதோ, அதுபோல, தொழிலாளர்களின் சம்பளத்தையும் பாதீட்டினூடாக அதிகரிக்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எதிர்வரும் 12ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும், அதில் தீர்க்கமான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.