முல்லைத்தீவில் விதவைப் பெண்ணின் பரிதாப வாழ்க்கை! கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?

Report Print Yathu in சமூகம்

தற்காலிக வீடு உடைந்து சேதமடைந்த நிலையில் கடந்த 11 மாதங்களாக வீடின்றி வாழ்ந்து வரும் விதவைப்பெண் தனக்கு வீட்டுத்திட்டத்தைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய காசிப்பிள்ளை சிவஞானசவுந்தரி (வய 60) என்பவர் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட திம்பிலிக் கிராமத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட தற்காலிக வீடு கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக குறித்த வீடு திருத்தப்படாத நிலையில் தறப்பாள் கொட்டகையில் வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறு பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் தனக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டத்தினை பெற்றுத்தருமாறு சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தபோதும் எவரும் இதனை செவிசாப்பதாக இல்லை என்றும் தனக்கான வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விதவைப்பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள நிலையில் தமக்கான வீட்டுத்திட்டங்கள், கிடைக்கப்பெறாத நிலையில் வாழ்ந்து வரும் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.