பிள்ளையானை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி விசேட பூஜை

Report Print Kumar in சமூகம்

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் அவரின் விடுதலையை வலியுறுத்தி விசேட பூஜையொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விசேட பூஜை இன்று காலை வாவிக்கரை வீதியில் உள்ள முருகன் ஆலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழிபாடுகளில் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வழிபாட்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தினை ஆட்சி செய்த காலப் பகுதியிலேயே மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்தி கண்டு வந்தது.

தொடர்ந்து அந்த அபிவிருத்தியை அவரால் மட்டுமே செய்ய முடியும். விசாரணை என்னும் பெயரில் எமது தலைவரை சிறையில் வைத்து இழுத்தடிப்பினை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து வருகின்றது.

எனவே இன்னும் காலத்தினை இழுத்தடிக்காமல் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers