தமிழர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாரபட்சம்! அமைச்சர் மனோ குற்றச்சாட்டு

Report Print Navoj in சமூகம்

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டப்படுள்ளமை அங்கு செல்லும் போது கண்கூடாக காணமுடிகிறது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு உறுதி செய்யப்படும். அவ்வாறு இல்லாவிடின் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருப்போம்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். அவர்களிடமிருந்து வளங்களைப் பெறுவதற்கு எமக்கு உரிமை உள்ளது. அவர்களிடம் பிச்சை கேட்டு பெறவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதியை மாற்றுவதற்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த நிலையை நாங்கள் வெகு விரைவில் மாற்றியே தீருவாம். எனது அமைச்சிலுள்ள நிதியை வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டத்தில் வாழும் தமிழ் பிரதேசங்களுக்கு பகிர்தளிப்பேன்.

தமிழ் மக்களின் மொழியையும், மண்ணையும், பொருளாதாரத்தையும், கல்வியையும் கட்டிக்காக்கும் அரசியல், அதிகாரம் தமிழர்களின் கரங்களில் இருக்க வேண்டும். அதன் மூலம் எமது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும்.

மட்டக்களப்பு தமிழன், யாழ்ப்பாண தமிழன், கொழும்புத் தமிழன், மலையகத் தமிழன், இந்தியத் தமிழன் என்று தமிழர்கள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்ற இணைப்பால் ஒன்றிணைந்துள்ளோம்.

எங்கள் மத்தியில் பிரிவினைகளைக் கொண்டு வந்து, பிரதேச வாதத்தைக் கொண்டு வந்து தமிழர்கள் பிரிந்திருப்போமானால் அந்தப் பிரிவினை எதிரிக்குத்தான் சாதகமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.