ஐரோப்பாவின் கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண் பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்

Report Print Dias Dias in சமூகம்

சுவிட்ஸர்லாந்தில் கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இதன் முதன்மை நோக்கம் அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிட்ஸர்லாந்தில் சைவத் தமிழ் மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும், சுவிஸ்வாழ் சைவர்களது தேவைகளை சுவிஸ் அரசிற்கும் சமூகத்திற்கும் ஒருமித்த குரலாக வலிமையுடன் எடுத்து விளக்கி, சுவிட்ஸர்லாந்து சட்டத்தில் உள்ளபடி சமய சுதந்திரத்துடன் நாம் எமது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்வதாகும்.

உலகெங்கிலும் நாம் பரந்து வாழ்ந்தாலும் இன்று வரையும் உலகம் எம்மை எமது இனம், மொழி, சமயம் சார்ந்தே விழிக்கிறது. ஆகவே பெரும்பாலான தமிழர்கள் நாம் இன்று சுவிட்ஸர்லாந்தில் அனைத்து உரிமைகளைப் பெற்று குடியுரிமையுடன் வாழ்ந்தாலும், ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களாகவே நோக்கப்படுகிறோம்.

இவ்வகையில் புலம்பெயர் தமிழர்களது பணிகள் முற்றுப்பெறவில்லை! கடந்தகாலத்தில் இருந்து கற்றுக்கொண்டு, இங்கு புலம்பெயர் நாடுகளில் அதை நெறிப்படுத்தி அடுத்த இளந்தமிழ்ச் சமூகத்திடம் ஆவணப்படுத்தி எமது இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கையளிக்க வேண்டிய பொறுப்பும் அத்துடன் தாயகத்து தமிழர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவவேண்டிய தார்மீகப்பொறுப்பும் என இரட்டிப்புச் சுமை எமக்குண்டு.

நாம் கடந்த காலத்தை திரும்பநோக்கின் 1980களில் ஈழத்தமிழர்கள் நாம் தாயகத்தில் இருந்து உலகெலாம் புலம்பெயர்ந்து ஐரோப்பா நாடுகளை வந்தடையும்போது, எம்முடன் நாம் எடுத்துவந்தபொருள் எமது இனம், மொழி, சமயமாகும்.

அக்காலத்தில் பண்பாட்டு அதிர்ச்சியுடனும் அக-புற சவால்களுடன் தமிழர்கள் ஐரோப்பாவில் போராட வேண்டி இருந்தது. எமது மொழி, சமயம், பண்பாடு என்பது இங்கு வாய்ப்பதற்கும் வாழ்வதற்கும் ஏற்ற சூழல் அப்போதுபெருவாரியான ஐரோப்பிய நாடுகளில் நிலவவில்லை.

எமது தாயகத்திற்குப் புறம்பானவெளிச்சூழலில் கடுமையான பனியிலும், குளிரிலும் உழைத்தும், முரணான பண்பாட்டுச்சூழலில் இசைவுகண்டு மிகக் கடுமையாகப் போராடி இன்று அடிப்படைத்தேவைகளையும், விருப்பத் தேவைகளையும் நிறைவுசெய்து அதைத்தாண்டியும் பயணிக்கின்றோம்.

போர்க்காலத்திலும் சரி, இன்று முடக்கப்பட்ட காலத்திலும் சரி புலம் பெயர்தமிழ்ச் சமூகம் கடுமையாகவே தாயகத்திற்காகவும், தாம் வாழும் நாடுகளில் எமது இனம், மொழி, சமயம், பண்பாட்டினை வாழவைக்க கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது.

ஆயுத ரீதியான ஈழ விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலம் விட்டுச்சென்ற இடைவெளி புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் மேலும் சவால்களை அதிகரித்து சமூகப்புறச்சூழலை கடினமாக்கி உள்ளது என்பது இப்போது உணரப்படுகிறது.

நாங்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு சட்டமுறை உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ் மக்களது மன்றங்கள் இலாபநோக்கற்ற, அரசியல் நோக்கற்ற, சமய நோக்கற்ற எனும் பல்வேறு நோக்குகளில் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கேற்ப நிறுவப்பட்டு, பொது யாப்பு இயற்றப்பட்டு இயங்குகின்றன.

ஒரு மன்றம் இயங்குவதற்கும் அது தனது நோக்கத்தை வாழ்ந்து அதனை பொதுச்சமூகத்திற்கு அளிக்க கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இவ்வாறே கோவில் மன்றங்களும் அமைந்துள்ளது.

எமது ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் இது பொருந்தும். பல இலட்சக்கணக்கான பல மணிநேர பல ஆயிரம் தமிழர்களின் உழைப்பின் பெறுபேறே ஒரு மன்றம் ஆகும்.

இராப்பகலாக உணவின்றி உறக்கம் இன்றி பொதுநோக்கில் உழைக்கும் உள்ளங்கள் ஆயிரம். இத்தனை தொண்டர்களும் பொதுப்பணியை விடுத்து வேலைக்குச் சென்றால் இன்னும் அதிகம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி இருப்பர்.

இவர்கள் தமது நேரத்தையும் பொருளையும் மன்றங்களுக்கு கொடையாக அளித்தே மன்றத்தின் நோக்கம் நிறைவேற ஆணிவேராக உழைக்கிறார்கள்.

சுவிசில் மட்டுமல்ல ஈழத்திற்கு வெளியில் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய அனைத்து தமிழ் அமைப்புக்களும் எமது இனத்திற்கும், மொழிக்கும், சமயத்திற்கும், பண்பாட்டிற்கும் நிறைந்த பணியாற்றிக்கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக சைவத்திருக்கோவில்கள் சமூக நடுவமாகவே இயங்குகின்றன. இயந்திரமயமான வாழ்வில் சற்று ஓய்வினை வழங்கி, உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் சமூகக்கூடமாகவும், இன- மொழி வளர்க்கும் திடலாகவும், பண்பாட்டு ஆடைகளை அணிந்து பண்பாடு கடத்தப்படும் முற்றமாகவும் கோவில்கள் விளங்குகின்றன.

ஒரே மொழியை ஒரு இடத்தில் பேசி நட்பும் உறவும் வளர்க்கும் சமூக நிலையமாகவும் கோவில்கள் அமைந்துள்ளன. ஆகவே இங்கு தொண்டாற்றும் அனைவரது உழைப்பும் விலைகொடுத்து வாங்கக்கூடிய பொருளல்ல.

இப்படி உழைக்கும் அனைவரும் மனிதர்களே!, எப்படி ஒரு குடும்பத்தில் எப்போதும் ஒரு கருத்து நிலவ முடியாதோ அதுபோல் பொது அமைப்புக்களிடையிலும் பல கருத்து ஒரு முரண்பாடாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அப்படி முரண்பாடு ஏற்பட்டால் அது ஒப்பந்தம் மூலம் தீர்வுகாணப்படலாம். அல்லது அனைத்துத் தரப்பும் பதவிகளுக்கு பதிலாக பொது நலன்களை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளைக் களையலாம்.

இல்லாவிட்டால் முரண்பாடுகள் உள்ள தரப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடன் பக்கம் சாராத மூன்றாம் தரப்பினை அணுகி தீர்வு காண முனைப்பினைக் காட்டலாம்.

இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் எப்போதும் அடியார்கள் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்களை அறியவும், முரண் ஏற்படின் தன்னார்வத்துடன் இருதரப்பின் ஏற்புடன், வெளிப்படைத்தன்மையுடன் இரகசியத்தன்மை காத்து இணக்கப்பாடு எட்டவும், முரண்களைக் களையவும் உழைக்க முன்னிற்கும்.

இது இப்படி இருக்க கடந்த சில வாரங்களில் ஒருகோவில் மன்றத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினை சமய நம்பிக்கை அற்றவர்களும், அதுபோல் உள்நோக்கம் கொண்ட அரசியற் தன்மையுடன் அணுகுவோரும் தமது கருப்பொருளாக்கி ஒட்டுமொத்த கோவில்களையும் சாடுவது பொருத்தமற்ற செயல் என நாம் கண்டிக்கிறோம்.

தாயகத்தில் இருந்து வேருடன் கொய்யப்பட்டு ஐரோப்பிய மண்ணில் விதைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அதிக வலியுடன் உழைத்து தாய் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் எமது இனத்திற்கும், மொழிக்கும், சமயத்திற்கும் பெரும் பணிசெய்து வருகிறோம்.

இந்நிலையில் தனிமனித அபிமானங்களாலும், பிரச்சனையை ஊதிப்பெருக்கி அதில் நலன் அடைய முனையும் சிலராலும் பலரது உழைப்பு மழுங்கடிக்கப்படுவதுடன் தமிழர்கள் தமது உழைப்பில் கட்டியெழுப்பிய அமைப்புக்கள் சிதறடிக்கப்படுவதும், தமிழர்கள் சொத்து சேதப்படுத்தப்படுவதையும் நாம் வன்மையாக இத்தால் கண்டிக்கிறோம்.

உண்மையான அக்கறை உள்ளவர்கள் முரண்பாடுகளின் ஆணிவேரைக் களைய முன்வந்து உழைக்க வேண்டும். பொறுப்புள்ள ஆர்வலர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டு, சமூகவலைத்தளங்களில் சமூகத்திற்கு நலன் அளிக்காத தகவல்களையும், காணொளிகளையும் பரப்புவதையும் பதிவிடுவதையும் என்றும் தவிர்க்க வேண்டும்.

பொது இடத்தில் எச்சூழலிலும் எவரும் தனி மனிதத்தாக்குதல்களை தவிர்த்து, சபை நாகரீகத்துடன் உரையாடும் சூழலும் காக்கப்படவேண்டும். எப்போதும் பொதுவாக அனைத்தையும் எடுத்த எடுப்பில் சாடுவதையும் தவிர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளினையும் இங்கு முன்வைக்கிறோம்.

எரியும்வீட்டை எரிபொருள்கொண்டு அணைக்கமுடியாது. நெருப்பை எரிபொருள்கொண்டு அணைப்பது அறிவில் சிறந்த செயலும் அல்ல. இதனையே சில செய்திகளும் எழுத்துக்களும் கடந்த நாட்களில் செய்திருக்கின்றன.

சுருங்கிப்போகும்விரைவான இவ்வுலகில் சமூகவலைத்தளங்களும், தமிழ் ஊடகங்களும் நாம் எமது மொழியையும்சமயத்தினையும் அடுத்த இளந்தமிழ்ச் சமூகத்திற்கு கடத்துவதற்கு பெரும் பங்களிப்பு நல்கின்றன.

அதேநேரம் தவறான குற்றங்கள் சுமத்தப்பட்டு பொதுப்பழி அனைத்துக் கோவில் மன்றங்கள் மீது சுமத்தப்படும்போது அவை எவருக்கும் நன்மை பயற்காது எதிர்மறையான கேடான விளைவினையே அளிக்கின்றன.

இப்படி எமது இனத்தை, மொழியை, சமயத்தை வலிமை இழக்கச் செய்யும் படைப்புக்களையும், செய்திகளையும் தமிழ் ஊடகங்களும், தமிழ் எழுத்தாளர்களும் தவிர்த்து தமிழ் இனத்தின், மொழியின், சமயத்தின்மீது உண்மையான அக்கறையுடன் அணுகி நல் எழுத்துக்களாலும், படைப்புக்களாலும் சிக்கல்களுக்குத்தீர்வுகாண முன்வருமாறு அன்புடன் அழைத்து நிறைகிறோம்.

அறிக்கையினை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்

Latest Offers