ஊடகம் தர்மத்தினை பேணி நடக்க வேண்டும் : கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை ஒன்றுக் கூடிய மாணவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனவுளைச்சலுக்கு உள்ளாகி முதலாம் வருட மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மாணவர்களின் பகிடிவதையினால் மனவுளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஆசிரிய மாணவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில ஊடகங்கள் ஊடக தர்மத்தினையும் ஊடக நடைமுறையினையும் மீறி செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதன் போது, ஊடக தர்மத்தினை பேணி நட, எதிர்கால ஆசிரியர்களை மனம் தளரச்செய்யாதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

சமூக நல்லொழுக்கம், சிறந்த பண்பாடுகளை பேணிவரும் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கௌரவத்திற்கு இழுக்கினை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை கண்டிக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி தொடர்பில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.இராஜேந்திரமிடம் வழங்கப்பட்டது.

இதேவேளை, ஊடகங்கள் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையாக செய்திகளை பிரசுரிக்கவேண்டும் எனவும் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் எனவும் கல்லூரி முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers