யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் முரண்பட்ட சிங்களவர்கள்

Report Print Theesan in சமூகம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபவனி சென்ற பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரத்தினைச் சேர்ந்த சிங்களவர் இருவர் முரண்பட்டுள்ளனர்.

அத்தோடு ஊடகவியலாளர்களுக்கும் சவால் விட்டுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கழக மாணவர்களினால் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி நேற்று அநுராதபுரத்தினைச் சென்றடைந்தது.

இதன்போது போராட்ட இடத்துக்கு வந்த அநுராதபுரத்தினைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் இருவர் பல்கலைக்கழக மாணவர்களுடன் முரண்பட்டுள்ளனர். அத்தோடு ஊடகவியலாளர்களுக்கும் சவால் விட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என பெரும்பான்மையினத்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு வருகைதந்த மாணவர்களிடம் அவர்கள் விடுதலை புலிகளை விடுமாறு கோரமுடியாது எனவும், அவர்களை குறித்த இடத்திலிருந்து செல்லுமாறும் விரட்டினர்.

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே குறித்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இருப்பினும் அவர்கள் இருவரும் அங்கு மாணவர்கள் மத்தியில் வந்து அடாவடி செய்து குழப்பத்தை உருவாக்க முயன்றனர். இந்தநிலையில், அங்கிருந்த பொலிஸார் மற்றும் சிறைக்காவலர்கள் வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்களை பின்தொடர்ந்த இவர்களை ஊடகவியலாளர் மறித்து இது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டம் என தெளிவுபடுத்தினார்.

இருப்பினும் விடுதலைப்புலிகளை விடுவிக்கும் போராட்டம் என செய்திகளில் வந்தால் ஊடகவியலாலர்களும் இங்கு வரமுடியாது என அந்த நபர்கள் சவால் விடுத்தனர்.

அதனை தொடர்ந்து குழப்பநிலை ஏற்படுத்தாது அவர்களை தெளிவுபடுத்தி அமைதியாக அனுப்பியதை தொடர்ந்து மாணவர்கள் திரும்பி சென்றனர்.