மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு இன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட அவர் நிலைமையை பார்வையிட்டதன் பின் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, இ.தொ.காவின் பொது செயலாளர் அனுஷியா சிவராஜா, நோர்வூட், மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள் என பலரும் உடனிருந்தனர்.

இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமான் மண்சரிவு அபாயத்தினை எதிர் நோக்கிய உள்ள பகுதியையும், பாதிகக்பட்ட மக்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டு கலந்துரையாடினார்.

இதன் போது பாதிக்கபட்ட 06 குடும்பங்களை சேர்ந்த 23 பேருக்கும் மாற்று காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்ததோடு, பாதிக்கபட்ட மக்களுக்கான மாற்று காணிகளை வழங்குவது தொடர்பில் குறித்த காணியினை தேசிய கட்டட ஆய்வாளர்களின் அறிக்கை சமர்ப்பித்த பின்பு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.