ஊடகங்களும் இந்த யுத்தத்தைக் கொண்டு நடாத்தியது : அமந்த பெரேரா

Report Print Rusath in சமூகம்

இனங்கள் என்ற அடிப்படையில்தான் இந்த யுத்தத்தை ஆட்சியாளர்கள் கொண்டு நடாத்தியதோடு அதற்கு இணையாக இனச்சார்பு அடிப்படையிலேயே ஊடகங்களும் இந்த யுத்தத்தைக் கொண்டு நடாத்தியதாக ஆய்வாளரும், எழுத்தாளருமான அமந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் இன்று பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக நடாத்தப்பட்ட பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

சுமார் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை இனங்கள் என்ற அடிப்படையில்தான் ஆட்சியாளர்களும் ஊடகங்களும் கொண்டு நடாத்தின.

ஒட்டுமொத்தத்தில் ஆட்சியாளர்களும், ஊடகக்காரர்களாகிய அனைத்துத் தரப்பாரும் தமக்குச் சார்பான சாதகமான இன அடையாள முறையிலேயே நடந்து கொள்வதை கடந்த கால, சமகால போக்குகள் புலப்படுத்துகின்றன.

இப்பொழுதும் அந்தப்போக்கிலேயே நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். இன்னமும் அதிலிருந்து விடுபடவில்லை. ஒட்டு மொத்த நாட்டுக்குமே பாதகமான தங்களுக்குச் சார்பான இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரே விடயத்தை சிங்கள ஊடகங்கள் ஒரு கோணத்திலும் தமிழ் ஊடகங்கள் அதற்கு எதிர்த் திசையிலும் புனைந்து செய்திகளை வெளியிடுவதாக ஊடகங்கள் சார்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், நடுநிலையான போக்கை இலங்கையின் ஆங்கில ஊடகங்கள் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகின்றது.

இனவாதத்தீயால் கருகிப்போயுள்ள நாட்டுக்கு ஆங்கில ஊடகங்கள் கடைப்பிடிக்கும் நடுநிலைப்போக்கு சற்று நிம்மதியைத் தரக்கூடியது என்றாலும் அதன் வாசகர்கள் ஒப்பீட்டளவில் சொற்பமானவர்களே.

சுமார் மூன்று இலட்சம் சிங்கள நாளிதழ்கள் வாசகர்களைச் சென்றடைகின்ற அதேவேளை வெறும் 50 ஆயிரம் ஆங்கில நாளிதழ்களே இலங்கையில் நடுநிலைச் செய்திகளைச் சுமந்து செல்கின்றன.

ஆகவே, இலங்கையின் ஆட்சியாளர்களும், ஆட்சியாளர்களுக்கு இணையாக சிந்தனைப் போக்குகளைக் கொண்டுள்ள ஊடகங்களும் இத்தகைய போக்குகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும்.

அதற்குத் தோதாகவே ஆக்கபூர்வமான சிந்தனை மாற்றத்திற்காக பிராநதிய ஊடகவியலாளர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என்றார் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சி நெறியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் “மாற்றம்” வலைத் தளத்தின் பிரதம ஆசிரியர் றைஸா விக்கிரமதுங்க அதன் இணை ஆசியரியர் அமாலினி டீ ஸைரா ஆகியோரும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிநெறிகளை வழங்கியுள்ளனர்.