நிலம் தாழ்ந்துள்ள பிரதேசத்துக்கு திகாம்பரம் விஜயம்: வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் நிவ்வெளி பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ள பிரதேசத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் இன்று நேரில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக தலா 16 இலட்ச ரூபாவைப் பெற்றுக் கொடுக்கவும், காணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நிலம் தாழ்ந்துள்ளதால் நேரடியாக 7 குடும்பங்களும், எதிர்காலத்தில் மேலும் 6 குடும்பங்கள் பாதிக்கப்படவுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளது.

மேலும், நிலம் தாழ்ந்துள்ளதால் தடைப்பட்டுள்ள ஹட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதை ஒன்றை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் அமைச்சர் திகாம்பரதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அரசாங்க அதிபர் அசித்த புஷ்பகுமார, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், எம். உதயகுமார், ஹட்டன் பொலிஸ் உதவி அத்தியட்சகர் அம்பேபிட்டிய, உட்பட இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

Latest Offers