ஒரே நாளில் பறிபோன சம்மாந்துறை முஸ்லிம் தமிழர்களின் வயல் காணிகள்!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in சமூகம்

பலவெளி வாய்க்கால் மேற்குப்புறம் சுமார் 836 ஏக்கர் காணிகளின் ஆவணங்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து அம்பாறை பிரதேசத்திற்கு எவ்வாறு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்றப்பட்டது என்று உறுதிக்காணிகளை கொண்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறைக்கு இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச சபைகளை சமமாக பகிர்ந்து கொண்ட கட்சிகளின் இரண்டு கெபினட் மந்திரிகள் இருந்தும் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுவது ஏன் என்ற கேள்வியெழுப்புகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சொந்தமான இக்காணிகளில் சிங்கள இனத்தவர்கள் கடந்த 3 தினங்களாக விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியாமல் அம்பாறை பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

1943ஆம் ஆண்டின் நில அளவை சான்றுகளுடன், தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்த இக்காணிகள், யுத்த காலத்திலும் கூட எவ்வித தடங்கலுமின்றி விவசாயம் செய்துவந்த காணிகள் நல்லாட்சியில் பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அண்மையில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் சம்மாந்துறையின் 10.28 ச.கி. பரப்பை கொண்ட 89 C, 89 B கிராம சேவகர் பிரிவுகள் அட்டாளைச்சேனை தொகுதியுடன் சேர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள்.

தற்போது அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ள காணிகள் இப்பிரதேசத்திற்குரியது என்பது மிக முக்கியமான விடயமாகும்.

நாடாளுமன்றத்தில் ஒன்றை காட்டி, கச்சேரியில் எல்லைகளை மாற்றும் நடவடிக்கைக்கு துணைபோனது மக்கள் பிரதிநிதிகளா? அல்லது சம்மாந்துறை அரச அதிகாரிகளா? ஏற்கெனவே கொண்டவட்டுவன் வரை இருந்த சம்மாந்துறை எல்லை சுருங்குவதற்கு எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே இன்றும் மன்சூர் எம். பி.அண்ட்கோ சேர்மனாக இருக்கும் நிலையில் காய்நகர்த்தியுள்ளது அம்பாறை கச்சேரி.

இது சம்மாந்துறை காணிகளை இழந்த விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சம்மந்தமான பிரச்சினையாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்தின் பிரச்சினையுமாக்கும். கரையோர மாவட்டத்தை பெறாமல் தடுப்பதில் பேரினவாதம் திட்டமிட்டு செயலாற்றும் இவ்வேளையில் முஸ்லிம் கட்சிகள் அபிவிருத்தி விழாக்கள் என்று பொன்னாடை கூத்தாட்டங்களை நடத்துவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முன்மாதிரியினை பின்பற்றி சம்மாந்துறையின் 52 பள்ளிகளுக்கு தலைமை தாங்கும் பள்ளிவாசல் தலைவர் முன்வர வேண்டும், சம்மாந்துறையில் இருந்து பறிபோகும் காணிகளை வீதிக்கு இறங்கிமீட்டெடுக்க போராட வேண்டும்.

சம்மாந்துறை வரையும் வந்த சிங்களம் காலப்போக்கில் இறக்காமம் பகுதியை சூறையாட நீண்டகாலம் எடுக்காது தமிழ் மக்களின் முன்மாதிரியை பின்பற்றி உங்கள் அரசியலை உங்கள் உரிமைக்காக பயன்படுத்த வேண்டும்.

கிழக்கில் முஸ்லிகளின் இருப்பை பாதுக்காக்க வேண்டுமானால் அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுடன் இணைந்து போராட வேண்டிய ஒரு தேவைப்பாடு நிறைந்து காணப்படுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.