இலங்கையில் 12 அடிவரை முற்றாக தாழிறங்கிய வீதி! சில குடும்பங்கள் வெளியேற்றம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
184Shares

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வெடிப்பு ஏற்பட்டிருந்த பகுதி 12 அடிவரை முற்றாக தாழிறங்கியதால் நோர்வூட், நிவ்வெளிகம பகுதியை சேர்ந்த 6 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

வெடிப்புற்றிருந்த ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியோரம் இன்று அதிகாலை முற்றாக தாழிறங்கிய நிலையில் தொடர்ந்தும் தாழிறக்கம் ஏற்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

ஹட்டன் தொடக்கம் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடையை நோக்கி செல்லும் இந்த பிரதான வீதியில் நோர்வூட், நிவ்வெளிகம பகுதியில் இந்த நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹட்டனிலிருந்து நோர்வூட் வழியாக பொகவந்தலாவ, பலாங்கொடை பகுதிகளுக்கும், நோர்வூட்டிலிருந்து மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் போக்குவரத்து தடையால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் பயணிகள் பல மைல்களை கடந்து செல்லும் மாற்று வழிகளை பயன்படுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இப்பகுதியில் மண் பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகள் விரைந்துள்ளதுடன், இவ்வீதியினூடான போக்குவரத்தில் ஈடுபடுபவர்களை மாற்று பாதைகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.