தொழிலாளர்களின் வேதன உயர்வு உடன்படிக்கை விவகாரம் : தொடரும் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
21Shares

ஹட்டன் - ஸ்டிரதன், மஸ்கெலியா, கிலண்டில் மற்றும் கொட்டகலை, மேபீல்ட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 1500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு உடன்படிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த குறித்த உடன்படிக்கை 19 மாத கால இழுபறியின் பின்னர் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற் சங்கங்களுக்குமிடையில் சர்வதேச முதலீட்டு வர்த்தக அமைச்சில் மீண்டும் கைச்சாத்தானது.

இந்த உடன்படிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டன.

புதிதாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி, தேயிலை மற்றும் றப்பர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 620 ரூபாய் தினசரி வேதனம் 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

அத்துடன், வருடத்தில் 300 நாட்கள் வேலையும் இந்த உடன்படிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு வழங்கப்பட்ட 25 ரூபாய் கொடுப்பனவும், றப்பருக்கான 30 ரூபாய் கொடுப்பனவும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் தேயிலை தோட்டங்களை தோட்ட நிர்வாகங்கள் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதனமும், அதற்கான நிலுவையும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டபோதும், குறித்த 2016 ஆம் ஆண்டின் புதிய உடன்படிக்கையில் நிலுவை கொடுப்பனவு பற்றி எந்த விடயமும் குறிப்பிடப்படிருக்கவில்லை.

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி, உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களை முன்வைத்து தோட்ட நிர்வாகங்களின் சம்மேளனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்திருந்தது.

முழுமை பெறாத இந்த உடன்படிக்கை, தொழிலாளர்கள் நலன்சார்ந்த தங்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை புதிய உடன்படிக்கை முழுமையாக கொண்டிருக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லையென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பெருந்தோட்டங்களை சுத்தம் செய்வதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக பெருந்தோட்டப் பணியாளர்கள் குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் உள்ளிட்ட தொழில்சார் நெருக்கடிக்கு முகம் கொடுத்ததுடன், உயரிய பயிர் விளைச்சலை பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

பெருந்தோட்ட பணியாளர்கள் நாளாந்தம் 18 கிலோகிராம் தேயிலையை பறிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், நிறையை காரணம் காட்டி வேதனம் குறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன.

அத்துடன் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் 300 நாட்கள் வேலை என்ற உடன்பாடு பின்பற்றப்படவும் இல்லை.

இவை தவிர்ந்த மேலும் பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பிலான உடன்படிக்கை நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வண்ணமே உள்ளனர்.