பாடசாலை இடைவேளையில் ஒருநாளும் சோறு சாப்பிடவில்லை: மனம் திறந்தார் சுசந்திகா

Report Print Manju in சமூகம்
340Shares

ஆசியாவின் கறுப்புக் குதிரை என அழைக்கப்படும் சுசந்திகா ஜயசிங்க கடந்த 2000ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின், பெண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று, இலங்கை சார்பில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

இது இலங்கைக்கு மறக்க முடியாத கௌரவத்தை பெற்றுக்கொடுத்த ஒரு நிகழ்வாகும்.

இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த சுசந்திகா ஜயசிங்கவிற்கு அண்மையில் விளையாட்டு அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவினால் விளையாட்டு செயற்றிட்ட ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது.

அவருடைய அனைத்து அனுபவங்களையும் பயன்படுத்தி அவரைப்போல பலரை உருவாக்குவதுதான் அமைச்சரின் திட்டமாக இருக்கிறது.

இதன் காரணமாக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 44வது தேசிய விளையாட்டு விழாவில் சுசந்தக ஜயசிங்க பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டார்.

விளையாட்டு விழாவில் ஒரு அரசியல்வாதி அல்லாதவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமை இதுவே முதல் தடவை.

ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமை இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கௌரவமாகும்.

இங்கு உரையாற்றிய சுசந்திகா தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

“எனது குடும்பத்தில் அம்மாவும், அப்பாவும் மூன்று அக்காவும் அண்ணாவும் இருந்தார்கள். எனது அம்மா றப்பர் பால் வெட்டினார்.

நான் முதலாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரைக்கும் உடுவக்க கனிஸ்ட வித்தியாலயத்தில் படித்தேன். நான் பள்ளிக்குக் சென்றபோது எட்டு பாடங்களுக்கும் எட்டு புத்தகங்கள் என்னிடம் இருந்ததில்லை.

எப்போதும் முழுமையான பாடசலை சீருடையை நான் அணிந்ததில்லை. எங்கள் வீடு தென்னை ஓலையால் வேயப்பட்டது. முழு வீட்டிற்கும் ஒரு அறைதான் இருந்தது.

நான்கு தூண்களால் சூழப்பட்ட ஒரு சிறிய குசினி இருந்தது. மழைக்காலத்தில் எங்கள் கூரையூடாக தண்ணீர் விழுந்து பாயெல்லாம் நனைந்திருக்கும். அப்பதெல்லாம் நான் அழுவேன்.

அந்த நேரத்தில், என் அம்மா ஏதாவது கூறி என்னைத் தேற்றுவார். நாங்கள் இரவில் சாப்பிட பாண் ஒரு இறாத்தல் மட்டுமே வாங்குவோம். அதனை நான்காக பிரித்து சாப்பிடுவோம்.

பாணை நான்காக பிரித்து சாப்பிட்ட போதிலும், ஐந்து வருடங்கள் வரை என் அம்மா எனக்கு தாய்ப்பாலை கொடுத்தார்.

கடவுளின் உதவியுடன், தாயின் பாலின் வலிமையால் இன்றுவரை எனக்கு எந்தவிதமான தடிமலும் ஏற்படவில்லை.

விளையாட்டுத் திறமைகள் காரணமாக 04ம் வகுப்பிலிருந்து சாதாரணம் வரை வராக்காபோல அத்நாவல மகாவித்தியாலயத்திற்குச்செல்ல வாய்ப்புக்கிடைத்து.

அங்கு படிக்கும் போது இடைவேளையில் சாப்பிட ஒருநாளும் சோறு கொண்டபோனது கிடையாது. பிள்ளைகள் இடைவளையில் சோறு சாப்பிடும்போது எனக்கு சரியான கவலையாக இருக்கும். அதே நேரத்தில், நான் மெதுவாக எழுந்துசென்றுவிடுவேன்.

எங்கள் அம்மா சில நாட்களில் இரவில் சமைத்த சோறு மிகுதியாக இருந்தால் அதனை மதியத்தில் சாப்பிடுவதற்கு கட்டித்தருவார்கள். அதில் பூசனிக்காய், வெண்டிக்காய் போன்ற கறி இருந்தால் கெட்டுப் போய்விடும்.

உணவை ஏனைய பிள்ளைகளுடன் பகிர்ந்து உண்ணும்போது சுசந்திகாவின் உணவு பழுடைந்த மணம் வருவதாக பிள்ளைகள் கூறுவார்கள்.

அந்த நேரத்தில், எங்கள் தாயார் அதிகாலையில் எழுந்து சமைத்து தருவதாக நான் அவர்களிடம் சொல்வேன்.

ஒலிம்பிக் பதக்கங்களையும் வெல்வதற்கான சக்தி எனக்கு இருந்தது.

நான் என் வாழ்க்கையில் ஒரு முழுமையான சீருடை அணியவில்லை. ஒரு நாளும் டை அணிந்து பாடசாலை செல்ல அதிஸ்டம் கிடைக்கவில்லை.

அவற்றை நினைக்கும்போது சரியான கவலை. ஆனால் இப்போது இருப்பதை நினைத்து மகிழ்ச்சிடைகிறேன்.

எல்லா சவால்களையும் சமாளிக்கவும் நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல எனக்கு வாய்ப்புக்கிடைத்தது.

இந்த ஆண்டு, செப்டம்பர் 28 ம் திகதி ஒலிம்பிக் பதக்கத்தை வென்று 18 வருடங்களாகின்றன. ஆனால் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற பிறகு இந்த நாட்டில் கிடைத்த மிக உயர்ந்த கௌரவம் மற்றும் விருது இதுதான்.

விளையாட்டு அரசியல் மயமாக்கலில் உள்வாங்கப்பட்டுள்ளதால் உலகளாவிய விளையாட்டு வீரர்கள் சிலர் விளையாட்டிலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.

என் கிராமம் வர்க்காபோல- உடுவக்க. என்னடைய இலங்கை பயிற்சியாளர், டெர்வின் பெரேரா, சேர். அவர் இன்று இந்த உலகத்தை விட்டுப்போய்விட்டார்.

டெர்வின் சேரைப் போன்று பயிற்சியாளர்களுக்கு நல்ல புரிதலை யாராலும் வழங்க முடியவில்லை. இத்தகைய குறைபாடுகளால் தான் விளையாட்டில் சரிவு ஏற்படும்.

நான் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்று 10 வருடங்களுக்குமேல் ஆகின்றன. சில நேரங்களில் விளையாட்டு என்றால் என்ன என அதிகாரமுள்ளவர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் விளையாட்டு பற்றி எனது அறிவு, அனுபவம் மற்றும் புரிதல் என்பவற்றை இந்த தொழிலில் பயன்படுத்தி விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.