திருகோணமலை பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து பாய்ந்து வெளியில் சுற்றித் திரிந்த இரு சிறுமிகளை இம்மாதம் 31ஆம் திகதி வரை திருகோணமலை உப்புவெளியிலுள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.
திருகோணமலை, மகமாயபுரம்,லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 11,மற்றும்14 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சிறுமிகளும் சிறுவர் இல்லமொன்றிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்று திருகோணமலை கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த சிறுமிகள் இருவரையும் பொலிஸார் அழைத்து விசாரித்த போதே சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இதேவேளை, இரு சிறுமியர்களையும் பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறுவர் காப்பகத்தில் சேர்க்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.