காட்டு யானைகளின் அட்டகாசத்தில் இருந்து தங்களை மீட்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, ஹொரவபத்தான பிரதான வீதியை மறித்து மகாதிவுல்வெவ பிரதேச மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தில் இருந்து தங்களை மீட்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணிக்கு மகாதிவுல்வெவ பாடசாலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் தொல்லைகளினால் தங்களது வீடுகள் சேதமாக்கப்படுவதுடன், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைகள் நாசமாக்கப் படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பிரதான வீதியை மறித்து வாகனங்களை செல்ல விடாது மக்கள் தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாக்குமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இருந்த போதிலும், மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க காட்டு யானைகள் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மிக விரைவில் சிறந்த தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை பிற்பகல் 12 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

தங்களுக்கு சிறந்த தீர்வினைப் பெற்றுத் தராவிட்டால் இன்னும் ஒரு வார காலத்துக்குள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.