பிரதேச செயலாளருக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Report Print Ashik in சமூகம்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய முசலி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில், மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பிரதேசச் செயலாளர் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியல்வாதிகளின் சொல் படி குறிப்பிட்ட நபர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாகவும், மண் கொள்வனவு செய்வதற்காக அனுமதி பத்திரம் பாகுபாடு காட்டி வழங்குவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் பிரதேசச் செயலாளர் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு, மக்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முசலி மக்கள் மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயில் வரை சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

“ஏற்கனவே குறித்த பிரதேசச் செயலாளர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முசலி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த குழுவினர் உடனடியாக அங்கு சென்று பிரதேசச் செயலாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுவார்கள்.

நீங்கள் என்னிடம் சமர்ப்பித்த மகஜர் உடனடியாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு முசலி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.