யாழில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய யுவதி கடத்தப்பட்ட சம்பவம்! ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி கடத்தி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் முச்சக்கரவண்டியின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் நீர்வேலி பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது சந்தேகநபரான சாரதி,

“தைத்தடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு தனது மனைவியை அழைத்து சென்றதாகவும், தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும்” குறிப்பிட்டுள்ளார்.

ஆலயத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது மனைவி இடைநடுவில் குழப்பம் ஏற்படுத்தியதாகவும், இதனால் கைகளை கட்டி அழைத்து சென்றதாகவும், தனது பிள்ளைகளின் ஆடைகளையே முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி எறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளையில் உள்ள மனநல வைத்தியசாலைக்கே தனது மனைவியை அழைத்து சென்றதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செம்மணி வீதிவழியாக ஆடிப்பாலம் வரையில் இந்த முச்சக்கர வண்டி சென்றுள்ளது. இதன்போது பலரும் அந்த முச்சக்கர வண்டியை நிறுத்துவதற்கு முயற்சித்தனர்.

எனினும், முச்சக்கர வண்டி எந்த இடத்திலும் நிறுத்தப்படவில்லை. அதேசமயம் திருநெல்வேலியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞையிலும் அந்த முச்சக்கர வண்டி நிறுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், முச்சக்கர வண்டி ஏன் எந்த இடத்திலும் நிறுத்தப்பவில்லை என்பது குறித்த தகவலை பொலிஸார் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் யுவதி ஒருவரை இன்று மதியம் அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - சுதந்திரன்