கடமையை செய்யத் தவறி ஒழிந்து திரியும் பனை அபிவிருத்தி சபைத் தலைவர்?

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் ஒழிந்துத் திரிகிறார். மக்களுக்கு முன்வரப் பயப்படுகிறார். தன்னுடைய கடமையைச் செய்ய தவறிவிட்டார். என்று வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் நடராஜா தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் கேட்டதிற்கு இணங்க பனை அபிவிருத்தி சபை கடந்த வாரம் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தது. இந்தக் கூட்டத்துக்கு அதிகாரிகள் தொடக்கம் சம்பந்தப்பட்ட தரப்பினர் என்று எல்லோரும் வந்தார்கள் இந்தக் கூட்டத்துக்கு முக்கியமாக வரவேண்டிய தலைவர் வரவில்லை. ஏன் வரவில்லை என்று நான் உட்பட பலர் அங்கு கேள்வி எழுப்பினர் ஆனால் பதில் கிடைக்கவில்லை.

தலைவரிடம் பனை அபிவிருத்தி தொடர்பாக சந்தித்து கதைப்பதற்கு எனக்கொரு நேரம் தருகிறார் இல்லை. தலைவரை சில இடங்களில் நேருக்கு நேர் காணும் போது ஓடி ஒழிகிறார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சபை இயங்குகிறது. பனை தமிழ் பிரதேசத்தின் மூலவளம். தமிழர்கள் ஒத்துப்போகும் ஒரு மரம் பனை மரம் என்று சொல்லுவார்கள். எனவே பனை மரத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதனால் தான் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் இங்கு வந்து பனை அபிவிருத்தி தொடர்பில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறேன்.

பனை அபிவிருத்தி சபைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் பனை அபிவிருத்தி சபைக்கு ஒதுக்கப்படும் பணம் மக்களிடம் போய்ச் சேராது தடுப்பதற்காக சபையே பல நிகழ்வுகளைச் செய்து அதாவது கொழும்பில் கண்காட்சி நிகழ்வைச் செய்வது போல் பல நிகழ்வுகளைச் செய்து பணம் சூறையாடப்படுகிறது. சபையின் பணம் கேட்பாரின்றி கையாளப்படுகிறது.

இது சம்பந்தப்பட்ட அமைச்சராக இருக்கும் சுவாமிநாதனும் கண்டுகொள்வதில்லை. இது சம்பந்தமாக அரசியல்வாதிகளுடனும் சந்தித்து கதைக்க முடியவில்லை. வடமராட்சி திக்கத்தில் இருக்கும் வடிசாலைக்கு 3 தடவைகள் அடிக்கல் நாட்டிவிட்டனர்.

இன்று வேலை நடந்தபாடில்லை. இப்படியான வேலைத்திட்டம் எங்கையாவது நடந்ததுண்டா? இப்படியே விட்டால் ஏற்றுமதிகள் தடைப்படும் அதனாலே பல கோடி ரூபாய் நஸ்டம் ஏற்படும். இந்த பனை அபிவிருத்தி சபை இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்படும்.

மக்களின் முயற்சியால் தான் இந்த சபை இயங்குகிறது. எனவே மக்கள் தலையிட்டு இதை அழிந்து போகாமல் தடுக்க வேண்டும் என்றார்.