யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாரதிராஜாவின் பேச்சு! சர்வதேச ஊடகம் தகவல்

Report Print Murali Murali in சமூகம்

தென்னிந்திய இயக்குனர் பாரதிராஜா யாழ். ஊடக அமையத்தில் நேற்று பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகமான பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதிராஜா வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த அவர், திரைப்படத் துறை தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள #MeToo விவகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அதற்கு கடும் தொனியில் பதிலளித்திருந்தமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா துறையில் பெண்கள் முகம்கொடுத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் #MeToo என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கம் நிலையில், அது குறித்து உங்களின் கருத்து என்னவென பாரதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

எனினும், இந்த கேள்வி தொடர்பில் ஆவேசமடைந்த பாரதிராஜா ஊடகவியலாளர்களுக்கு கடும் தொனியில் பதில் வழங்கியிருந்தார்.

“#MeeToo என்றால் என்னவென்று சொல்லு. #MeeToo என்றால் என்ன. அதில் என்ன பிரச்சனை? என மீண்டும் அவர் கடும் தொனியில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி கேட்டார்.

இதன்போது, சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை #MeeToo என்ற தலைப்பில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆகவே அதனைத் தான் கேட்கின்றோம் என ஊடகவியிலாளர் பதில் வழங்கினர்.

எனினும், அதனை நீ பார்த்தியா? நீ பார்த்தியா? இல்லை தானே, அவ்வாறு கேள்விப்பட்டுருக்கிறியா நீ? அவ்வாறு கேள்விப்படுவதற்கெல்லாம் நான் இங்க பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நான் பார்த்தேன். இதுதான் ஆதாரம் என்று நீ சொன்னால் அதற்கு நான் பதிலளிப்பேன் என கூறிய பாரதிராஜா இனி வேறு எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று தெரிவித்து இடைநடுவே எழுந்து சென்றார்.

இந்த விடயம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.