சம்பள பேச்சுவார்த்தை தோல்வி! பிரதான வீதியில் ஒன்று திரண்ட 800 தொழிலாளர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் டயகம, தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை சுமார் இரண்டு மணி நேரமாக முன்னெடுத்துள்ளனர்.

இதில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக பெற்றுத்தர முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தோட்ட கம்பனிகளுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் எங்களுக்கு பிச்சை போடுவது போல 50 அல்லது 75 ரூபாய் வழங்குவது நியாயமற்ற செயலாகும்.

கடந்த காலங்களிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, எங்களை ஏமாற்றியதையும் சுட்டிக்காட்டினர்.

எனவே, காலம் தாழ்த்தாமல் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பதாக சம்பள உயர்வை அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றுப்பட்டு பெற்றுத்தர வேண்டும் என ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers