ஊழலில் ஈடுபட்ட அதிகாரிக்கு மட்டக்களப்பு பகுதியில் மீண்டும் உயர் பதவி

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - கோறளை வடக்கு, வாகரை பிரதேசசபைக்கு செயலாளராக தற்போது நியமனம் பெற்று வந்த உத்தியோகத்தர், குறித்த பிரதேசத்திற்கு பொருத்தமற்றவர் என சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் பிரதேசத்தின் பொதுமக்களால் பிரதேசசபைக்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள் வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த உத்தியோகத்தர் ஏற்கனவே மேற்குறித்த பிரதேசசபையில் கடமையாற்றியவர்.

அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் பல்வேறு ஊழல் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கையில் அவர் சம்பந்தப்பட்டதாக பலராலும் விமர்சிக்கப்பட்டவர்.

எனவே அவர் எமது பிரதேசசபைக்கு வேண்டாம். பிரிதொரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகரை பிரதேசசபை தவிசாளர் எஸ்.கோணலிங்கத்திடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், எமது சபைக்கு செயலாளர் ஒருவரை பெற்றுக் கொள்வது தொடர்பாக கடந்த வாரம் சபை அமர்வில் உறுப்பினர்களால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எமது கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சபை செயலாளரை நியமிக்கும் அதிகாரம் என்னுடையதில்லை. எனவே தங்களது மகஜரை உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பித்து நல்லதொரு தீர்வினை பெற்று தருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். மேற்குறித்த சபையில் ஏற்கனவே கடமையாற்றிய செயலாளர் பதிலீடு இல்லாமல் இடமாற்றம் பெற்று பிரிதொரு அரச தினைக்களத்திற்கு சென்று கடமையாற்றி வருக்கின்றார்.

கடந்த இரண்டு மாத காலமாக வாகரை பிரதேச சபைக்கு செயலாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் சபையின் நிர்வாக நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது.

மற்றும் மக்களின் நாளந்த சபை தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.