ஜனாதிபதியை கொலை செய்ய சதி! பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிர்ச்சி செய்தி

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.

அமைச்சரின் இந்த பரிந்துரை கடிதம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையெழுத்துடன் இன்று முற்பகல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கொலை சதித்திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் தகவல்களுக்கு அமையவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை பணி இடைநீக்கம் செய்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாலக சில்வா மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, அவரை உடனடியாக கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், விசாரணைகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் நோக்கில் நாலக சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.