இளைஞனுக்கு எமனாக மாறிய எருமை மாடு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் 19 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான குமரகுருபரன் தனுஷ்கரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனட சம்பூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, நண்பர்களை மல்லிகை சந்தியில் இறக்கிவிட்டு மீண்டும் தோப்பூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன் போதே எருமை மாட்டுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் முன்னெடுத்துள்ளதுடன் மரணத்தில் ஏதும் சந்தேகம் இல்லாமையினால் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் எருமைமாடு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.