இரவு நேரங்களில் பெண்களும், ஆண்களும் நிம்மதியாக உறங்க வழியில்லை! மக்கள் கவலை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக உறங்கி மழையிலும், வெயிலிலும் ஒரு அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்றது.

இந்நிலையில் மக்களுடைய நிலமைகளை நேரில் அவதானித்து அவற்றை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினர்கள் இன்று காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மக்கள்,

இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம், 1983ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் காஞ்சிரமோட்டை கிராமத்தில் இருந்த 3 பேர் கடத்தி செல்லப்பட்டனர்.

அவர்களின் நிலை இன்றளவும் தெரியாது. இந்நிலையில் தொடர்ந்தும் கிராமத்தில் இருக்க இயலாமல் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாம் எமது கிராமத்தை விட்டு வெளியேறினோம்.

பின்னர் இந்தியாவிலும், வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் எமது சொந்த நிலத்தில் நாங்கள் மீள்குடியேறிய நிலையில் வனவள திணைக்களம் எமது மீள்குடியேற்றத்திற்கு தொடர்ச்சியாக தடைகளை விதித்து வருகின்றது.

குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு வந்திருக்கும் 38 குடும்பங்களுக்கும் அரை நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நிதி கிடைத்துள்ளபோதும் வனவள திணைக்களம் அந்த நிதி எமக்கு கிடைக்காத வண்ணம் தடைகளை விதித்து வருகின்றது.

இடப்பெயர்ச்சிக்கு முன்னர் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வந்தோம். பலர் இப்போதும் தங்கள் சொந்த நிலத்திற்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனாலும், அச்சம் காரணமாக அவர்கள் தர தயங்குகிறார்கள். நாம் எமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வீடுகளை கட்டி நின்மதியாக வாழவேண்டும்.

அதற்கு ஆவண செய்யவேண்டும். மீள்குடியேற்றத்திற்கு வந்து 4 மாதங்களாகும் நிலையில் வீதி சீரமைத்து தரப்படவில்லை. மின்சாரம் தரப்படவில்லை.

கிணறு அமைக்க அனுமதி தரப்படவில்லை. இவ்வாறான நிலையில் எங்களுடைய பிள்ளைகள் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து பாடசாலைகளுக்கு சென்று வருகின்றார்கள். 3 கிலோ மீற்றர் தூரம் நடந்து வைத்தியசாலைக்கு சென்று வருகின்றோம்.

இதேவேளை, நாம் எங்களுடைய சொந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்கு ஆவண செய்யுங்கள் என மக்கள் கண்ணீர்மல்க காஞ்சிரமோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.