இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படும் கல்முனை மாநகர முதல்வர்

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுவருகின்ற இந்து ஆலயத்தை அங்கிருந்து அகற்றுவதற்காக கல்முனை மாநகர சபை முதல்வர் ஜனாப். றக்ஹீப் நீதி மன்றில் தொடர்ந்த வழக்கினை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகின்றது.

கல்முனை மாநகரசபை மேயர் அவர்களுக்கு சட்டவிரோதமாக கல்முனை பிரதேச செயலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை அகற்றுமாறு கிடைக்கப்பட்டுள்ள மனுவினை அடுத்து வழக்கினை நேற்று தொடர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயத்தை அகற்றுவதற்காக கல்முனை நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை கல்முனை மாநகரசபை மேயர் தாக்கல் செய்துள்ளார், இது இப்பிரதேச தமிழ் மக்களிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட்ட சட்டவிரோதமான கட்டடம் என குறிப்பிட்டே இந்த சிறு ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் சமாப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனியான நிர்வாகம் ஆளணி, முகாமைத்துவம், நிர்வாக எல்லைகளுடன் இயங்குகின்றபோதும் இதனை தரமுயர்த்தவிடாது கடந்த 30 வருடங்களாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி தடுத்துவருகின்றனர்.

அதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபட்டுவரும் வணக்கஸ் தலத்தை அகற்றுவதற்கு தற்போது கல்முனை மாநகரசபை முதல்வர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயல் இனங்களிடையே இனவாதத்தை தூபமிட்டு வளர்க்கும் செயற்பாடா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது.

நேற்று நடைபெற்ற கல்முனை மாநகரசபை அமர்வில்,சபையின் எதிர்கட்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதல்வரை நோக்கி ஆலய வழக்கு தாக்கல் தொடர்பாக கேள்வி கேட்டதுடன், இந்த வழக்கை வாபஸ் பெறுமாறும், இது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கெடுக்கும் செயல் எனவும் கருத்துக்ளை முன்வைத்தனர்.

இதன்போது மாநகரசபை முதல்வர் நீதிமன்றில் வழக்கு இருப்பதால் இது பற்றி கருத்துக்கூற முடியாது என்னும் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் முதல்வருக்கும் காரசாரமான விவாதம் ஏற்பட்டதாகவும் இதன் பிற்பாடு சபையின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது

இன்று கல்முனை வடக்கு தமிழ்பிரிவு பிரதேச செயலக வளாகத்திற்குள் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், பிரதேசவாழ் இளைஞர்களும் கூடியிருந்தனர்.

இதன்பின்பு சிறிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது அப்போது கலாசாரம் மற்றும் மத விழுமியங்களை பேணிக்காப்பதற்காக நீதி துறையை மக்களை கொண்டே அணுகுவதாகவும் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.