பொலிஸாரின் தலையீட்டினால் இடை நிறுத்தப்பட்ட துயிலுமில்ல சிரமதான பணிகள்!

Report Print Nesan Nesan in சமூகம்

இந்த ஆண்டு மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பது தொடர்பாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் இன்று காலை முதற்கட்ட சிரமதானப்பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பூர், ஆலங்குளம், மூதூர், சந்தோசபுரம், கட்டைப்பறிச்சான் ஆகிய பகுதிகளின் மக்கள், முன்னாள் போராளிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த சிரமதான் பணியானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையிலான குழுவினர் துயிலுமில்லத்தின் சிரமதான பணிகளுக்கான அனுமதியினை பெறுவதற்காக கிராம சேவகர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச காணி உத்தியோகத்தர் ஆகிய அதிகாரிகளிடம் சென்ற வேளையில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், அனுமதியின்றி சிரமதான பணிகளை தொடர வேண்டாம் என்ற கோரிக்கைக்கு அமைய சிரமதானப் பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கந்தசாமி இன்பராசா, இன்று நாம் ஆலங்குளம் துயிலுமில்லத்திற்கான முதற்கட்ட சிரமதான பணியை ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் இப்பிரதேசத்தில் மேற்படி பணிகளை மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிகள் கேட்கப்பட்டுள்ளன. நாளைய தினம் எமக்கான அனுமதிகள் கிடைத்து விடும்.

அதனால் இன்று சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலைகளை நிறுத்தி விட்டு நாளை காலை சகல பிரதேச மக்களை ஒன்றிணைத்து அதிகமான ஆளணிகளுடன் சிரமதானத்தை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் சிரமதான பணியில் திருமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் போராளிகள், பெண்கள் அமைப்புக்கள் என சகல தரப்பினர்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.